ஞாயிறு, 8 நவம்பர், 2009

நலம் நலமறிய ஆவல்: பாரதி என் காதலன்

நலம் நலமறிய ஆவல்: பாரதி என் காதலன்

பாரதி என் காதலன்

(டிசம்பர் 2007 ஆம் ஆண்டு அபுதாபியில் நாங்கள் (Bhrathi for Friendship) நடத்திய பாரதி விழாவில், இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தர் அவர்களுக்கு “கலையுலக பாரதி” என்ற பட்டமளித்து பாரட்டிய போது, நான் எழுதி பேசிய கவிதை)




பாரதி என் காதலன்!

பாரதியே!

இக்கால

இலக்கியத்தின் முதல்வனே!

புதுக்கவிதையின் தலைவனே!

நூற்றாண்டுகள் முன்பு வாழ்ந்த

மூத்த கவிஞனே!

உனது முகத்தில் நிரந்தர மீசை துளிர்விடுமுன்பே

அகத்தில் சுதந்திர ஆசை துளிர்விட்டது!



உன் கவியில்தான்

எத்தனை எத்தனை சொற்பதம்

கவியே உன்

படைப்புகள் அத்தனையும்

அற்புதம்!

கல்லைச் சிதைத்தால்

சிலையாகும்!

சொல்லை இணைத்தால்

கவியாகும்!

தமிழை இணைத்து

நீ கவி செய்தாய்

எதனை இழைத்து

இறைவன் உனை செய்தான்!



சில மெட்டுக்குள் சுருங்கி நிற்பது

எனது கவிதை

இமயம் வரை பரந்து நின்றது

உனது கவிதை

உன் எழுத்துக்கள் மட்டும்

உயிர் பெற்று ஓரணியில் நின்றால்

எங்களைப் பார்த்துச் சொல்லும்

மூடர்களே

எங்களை முறையாகப் பயன்படுத்துங்கள்

என்று



அக்னிக்குஞ்சுகளாய்

ஆக வேண்டும்

என்றாய் அன்று,

பட்டினிக்குஞ்சுகளாய்

பலர் பரிதவிக்கும்

நிலை இன்று!

ஆயிரம் கனவுகள்

கண்டாய் அன்று,

அதில் சில நூறு கூட

நனவாகவில்லை இன்று!



கன்னியவள் கார் மேகக்

கூந்தல் அழகு

கதை சொல்லும் கண்ணழகு

கன்னத்தில் குழியழகு

முன் வரிசைப் பல்லழகு

முல்லைச் சிரிப்பும்தான் அழகு

இவையெல்லாம் எனக்கெதற்கு

கவியே

உன் அழகுத்தமிழே அமுதெனக்கு!


பாரதியே!

பாரதத்தின் தீயே!

சொல்லாத கவிதையெல்லாம்

சொல்லிவிட்டாய்!

மேலான எண்ணமெல்லாம் உணர்வாக

வடித்துவிட்டாய்!

தள்ளாத வயது வரை தாய் மண்

வேண்டாமென்று

நாற்பதைத் தாண்டுமுன்பு நள்ளிரவில்

சென்று விட்டாய்!



நீ போகும் போது

நான் மட்டும் உடன் இருந்தால்

காலனிடம் உன் கவிதை பாடி

அவனை

கண்ணீரால் கரைத்திருப்பேன்,

அவன் கரையாத பட்சத்தில்

போனால் போகட்டும் என

நானும் உன்னோடு வந்திருப்பேன்!



விண்ணிலிருந்தல்ல

தமிழ் மண்ணிலிருந்து

உதிர்ந்து விட்ட

புதுமை நட்சத்திரமே,

புரியாத புதுக்கவிதையே!

நீ வாழ்ந்தபோது உன் வரிகள்

புரியவில்லை எவருக்கும்

நீ மறைந்தபின்பு உன் வரிகள்தான்

வாழ்க்கையே பலருக்கும்!



மண்ணுக்கும் உண்டாகலாம்

ஒரு நாள் மரணம்

மண் மணக்கும்

உன் கவிதைக்கு

ஒரு நாளும் இல்லை

மரணம்!



உன் பிறந்த நாளுக்கு

உயர்வான ஒன்று

சமர்ப்பணம்

உயர்வாக என்னிடம்

ஒன்றுமில்லாத காரணத்தால்,

உயர்வான உன் கவிதையே

உனக்கு சமர்ப்பணம்!



உன் புகழ் பாட அழைத்தார்கள்

முயற்சி செய்தேன் முதலில்

புரிந்து கொண்டேன் முடிவில்

கங்கையை கைச் செம்புக்குள் அடக்க

நான் ஒன்றும் அகத்தியன்

இல்லையென்று!



அன்புடன்


பாரதி சங்கர்

வியாழன், 5 நவம்பர், 2009

சுனாமி அஞ்சலி (எழுதியது 2004ம் ஆண்டு ஜனவரியில்)

2004 ஆம் ஆண்டு சுனாமி பேரலைகள் பல்லாயிரக்கணக்கான உயிர்களையும், அவர்களின் உடமைகளையும் பறித்துக்கொண்டதைக் கண்டு உலகமே பதறியபோது, அந்த சோகச்சுவடுகளில் மனம் துடித்தபோது எழுதியது.

ஏ பூமியே!
நீ எங்களுக்கு
ரத்தத்தில் சொந்தமில்லை
என்றாலும்,
மொத்தத்தில் எங்கள் சொந்தமல்லவா!

உன்னை பூமாதேவி என்றார்கள்,
பொறுமையின் தாய் என்றார்கள்,
அது மெய்யென்று எண்ணியிருந்தோம்.
இப்போதுதான் புரிந்தது
அது மெய்யல்ல பொய்யென்று!


நீயும்,
உன் மீது அதிகபட்சமாக
ஆளுமை செய்யும்
கடல் அரக்கனும் கூடி,
எங்கள் குடி கெடுத்து விட்டீர்களே!

உனக்கு ஏன் கடல் அரக்கனோடு
ஒரு அவசரக்காதல்!
இந்த அவசரக்கூட்டணியின்
அவசியம்தான் என்ன!
சுனாமி என்ற காலதேவனின்
பினாமியை பெற்றெடுக்க வேண்டிய
அவசரம்தான் என்ன!

துன்பமின்றி ஒரு குழந்தை
நீ ஈன்றெடுத்தாய்!
சாகும் வரை
சாகாத துன்பம்தனை
எங்கள் மீது ஏற்றிவிட்டாய்!

உங்கள் கூட்டணி
எங்களுக்கு
கொடுத்தது ஏதோ கொஞ்சம்!
இன்று
எடுத்ததோ விண்ணையே மிஞ்சும்!

உன் ஆசான்
என் தேசத்து
அரசியல் கோமான்களா என்ன!
செந்நீரை
உன் மடியில் காணிக்கையாக்கி,
நாங்கள் ஈட்டிய செல்வமெல்லாம்
அழித்தது போதாதென்று
எங்கள் கண்ணீரையும் அல்லவா,
காணிக்கையாக எடுத்துக்கொண்டாய்!

ஈட்டிய செல்வங்கள் போகட்டும்!
ஈட்டிடுவோம் நாளை!
போற்றிய கண்மணிகள்
போன பின்பு
செல்வங்கள் என்ன!
சொந்தங்கள் என்ன!

கடல் சென்று
கொண்டு வந்ததெல்லாம்
கடல் வந்து
கொண்டு சென்றதம்மா!
உடல் நொந்து
பெற்ற கோடி பிள்ளைகளும்
ஜீவன் விட்டு சென்றதம்மா!


சமாதிக்கு மலர்களால்
என்றென்றும் அஞ்சலி!
அது வாடிக்கை!
இன்று,
எங்கள் மலர்களுக்கே
மலர்களால் அஞ்சலி!
இது என்ன,
இயற்கையின் கேளிக்கை!

இயற்கையே!
நாங்கள் யாருக்காக அழுவது!
அண்ணனை இழந்த தங்கைக்காகவா!
தங்கையை இழந்த அண்ணனுக்காகவா!
இல்லை அத்தனையும் இழந்த அன்னைக்காகவா!
நாங்கள் யாருக்காக அழுவது?

இறந்தவர்களுக்காகவா!
அல்லது
இருந்தும் இறந்து போன
மனிதர்களுக்காகவா!

போதும் நீ உனக்குள்
நடத்தும்
பூகம்ப விளையாட்டு
வேண்டுமென்றால்,
எங்களை கொன்று விடு!
எதிர் கால உலகத்தை
உருவாக்கும்,
எங்கள் பிள்ளைகளை விட்டு விடு!

கண்ணீருடன்

பாரதி சங்கர்

திங்கள், 17 ஆகஸ்ட், 2009

வணக்கம்

அனைத்துலக இணைய தள தமிழ் அன்பர்களுக்கு பாரதி சங்கரின் பணிவான வணக்கம்.
இன்று முதல் உங்களுடன் இணந்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ள விரும்பும் உங்கள் நண்பன்.
பாரதி சங்கர்